திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, பரணி, மகா தீப தரிசனத்துக்காக 1,600 டிக்கெட்டுகள் புதன்கிழமை முதல் (நவ.21) இணையதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது: அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகின்றன. பரணி தீபம், மகா தீபம் ஏற்றும்போது, பக்தர்கள் கோயிலுக்குள் செல்லத் தேவையான கட்டண டிக்கெட்டுகள் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
1,600 டிக்கெட்டுகள்: பரணி தீபத்துக்கான ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் 500 எண்ணிக்கையில் விற்கப்படுகின்றன. மகா தீபத்துக்கு ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் ஆயிரமும், ரூ.600 மதிப்பிலான டிக்கெட்டுகள் 100-ம் என மொத்தம் 1,600 எண்ணிக்கையிலான சிறப்பு கட்டண டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
காலை 11 மணிக்கு…: இந்த டிக்கெட்டுகளை புதன்கிழமை (நவ.21) முற்பகல் 11 மணி முதல் கோயிலின் இணையதளமான www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். கட்டணச் சீட்டை பெற ஆதார் அட்டை, செல்லிடப்பேசி எண், இணையதள முகவரி ஆகியவை கண்டிப்பாகத் தேவை. ஓர் ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச் சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.
குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும். கட்டணச் சீட்டு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே அனுப்பப்படும். தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டணச் சீட்டு அசல், ஆதார் அட்டை அசலுடன் வர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.