மஹாசிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் இன்று அதிகாலை முதலே நடைபெற்று வரும் சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
மாதந்தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
சிவப்பெருமானுக்கு உகந்த தினமான இந்த நாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் இன்று அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் சிவப்பெருமானின் பஞ்சபூத தலங்களான திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் எழுந்தருளியுள்ள சிவப்பெருமானுக்கும், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உள்பட அனைத்து சைவத் திருத்தலங்களிலும் நடைபெற்று வரும் நான்கு ஜாம பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
வடமாநிலங்களில், காசி விஸ்வநாதர் ஆலயம், மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள திரும்பாகேஸ்வர் ஆலயம், சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள சிவன் கோவில், உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அமைந்துள்ள சிவாலயம், தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள கௌரி சங்கர் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் மஹாசிவராத்திரி விழா பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.