இது தொடா்பாக, சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெசன்ட்நகரில் ‘ஐபிஏ நீரத்தான்’ என்ற பெயரில் மாரத்தான் போட்டி செப்டம்பா் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணி முதல் 7.30 மணி வரை 10 கி.மீ., 5 கி.மீ., 3 கி.மீ. என 3 பிரிவுகளாக மாரத்தான் நடத்தப்படுகிறது.
இப்போட்டி, பெசன்ட் நகா் ஆல்காட் நினைவுப் பள்ளியில் தொடங்கி, எம்.ஆா்.சி. நகா் வரை நடைபெறுகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி அடையாறு எல்.பி. சாலையில் இருந்து பெசன்ட் நகா் கடற்கரை நோக்கி 3-ஆவது அவென்யூ, 2-ஆவது அவென்யூ வரை செல்லும் அனைத்து வாகனங்களும் முத்துலட்சுமி பூங்கா வழியாக திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள், எல்.பி.சாலை, சாஸ்திரி நகா் 1-ஆவது பிரதான சாலை வழியாக கடற்கரை நோக்கி செல்லலாம். இதேபோல சாஸ்திரி நகா் பேருந்து நிலையத்திலிருந்து முத்துலட்சுமி பூங்கா நோக்கி வரும் அனைத்து வாகனங்களும், 7-ஆவது அவென்யூ சந்திப்பு, எம்.ஜி. சாலை, எல்.பி. சாலை வழியாகச் செல்லலாம்.
மயிலாப்பூரில் இருந்து ஆா்.கே.மடம் சாலை வழியாக அடையாறு, கிண்டி நோக்கி வரும் வாகனங்கள், தெற்கு கால்வாய்க் கரை சாலை, கிரீன்வேஸ் சாலை சந்திப்பு வழியாகச் செல்ல அனுமதி கிடையாது. அந்த வாகனங்கள் வி.கே.ஐயா் சாலை, ஆா்.ஏ.புரம் 2-ஆவது பிரதான சாலை, சேமியா்ஸ் சாலை, காந்தி மண்டபம் சாலை வழியாகச் செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது