சென்னை: கடல்சார் பல்கலையின் நுழைவு தேர்வுக்கு ஏப்., 1ல் விண்ணப்ப பதிவு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தேசிய கடல்சார் பல்கலை சென்னையில் செயல்படுகிறது.
இந்த பல்கலையின் இணைப்பில் நாடு முழுவதும் 23 கல்லுாரிகளில் கடலியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேருவதற்கு கடல் சார் பல்கலை நடத்தும் எம்.யூ.செட்., என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ஜூன் 1ல் தேசிய அளவில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் www.imu.edu.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1ல் துவங்கி ஜூன் 5ல் முடிகிறது. இதற்கான விபரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் ஏப்., 1 முதல் தெரிந்து கொள்ளலாம்.