அம்பத்தூர் மண்டலத்தில் அக்.6-ம் தேதி ‘மக்களைத் தேடி மேயர்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக மேயரிடம் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில் “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டம், கடந்த மே 3-ம் தேதி சென்னை ராயபுரத்தில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திரு.வி.க.நகர், அடையாறு மற்றும் திருவொற்றியூர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக மக்களைத் தேடி மேயர் திட்டத்தின்கீழ், அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட கொரட்டூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காலனியில் வரும் அக்.6-ம்தேதி (வெள்ளிக்கிழமை) மேயர் பிரியா, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார்.
கொரட்டூரில் உள்ள சுவாதி பேலஸில் காலை 10 முதல் மதியம்1 மணி வரை மேயர் மனுக்களை பெறுகிறார். எனவே, அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட மக்கள் அனைவரும் இந்தவாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் பகுதியில் உள்ள சாலை, மழைநீர்வடிகால், தெரு மின்விளக்கு, கழிப்பிட வசதிகள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி, தொழில்வரி, குப்பை அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றம், பூங்கா மற்றும் விளையாட்டு திடல் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கலாம் என மாநகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.