தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில் நேற்று முதல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நேற்றைய முதல் நாளில் 6,123 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுளது. கடந்த ஆண்டு முதல் நாளில் 9,238 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் சுமார் 3,000 விண்ணப்பங்கள் இந்த ஆண்டு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். மாணவர்களைச் சேர்க்க வியாழக்கிழமை முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கிய நிலையில் சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும். சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org- என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம். எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. ஜூன் 7 கடைசி: விண்ணப்பத்தைப் பெற வரும் ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர ஜூன் 7-ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஜூன் 17ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் 20-ஆம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும். 40 ஆயிரம்: கடந்த ஆண்டு (2015-2016) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர் மொத்தம் 31,525 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரிக்கும் என்பதால் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary : MBBS application distribution beyond 6000 on first day.