2019-20ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதற்காக மென்பொருள் உருவாக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
முதன்முதலாக இந்த நடைமுறையை வரும் ஏப்ரல் மாதம் முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கு பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், முதுநிலை மருத்துவப் படிப்புக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் விண்ணப்பங்களாவது வரும் என எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை நடைமுறைப்படுத்துவதால், கலந்தாய்விற்காக மாணவர்கள் சென்னை வரவேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர்கள் இருக்கும் பகுதியிலிருந்தே தங்களின் விருப்பமான கல்லூரி மற்றும் படிப்பை தேர்வு செய்ய இயலும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். வரும் கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் புதிதாக பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரும் கல்வியாண்டிலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 508 முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்புகான அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.