stethoscope and pen resting on a sheet of medical lab test results, with patient file and x-ray or mri film
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு 2 கட்டங்களாக பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல்கட்ட தேர்வு நடந்தது. இரண்டாம் கட்ட தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை (நீட்) எதிர்த்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன.

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய பொது நுழைவுத்தேர்வுகளுடன் வழக்கமான தனித் தேர்வுகளை நடத்த அனுமதி கோரி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. ஏற்கெனவே தமிழக அரசும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தன. அந்த மனுக்களில், அந்தந்த மாநில அரசுகளே தங்கள் பாடத்திட்டத்துக்கு ஏற்ப தனித் தனியாக நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. சில தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில் உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை விசாரிக்கும் என்று நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கூறினார். பின்னர் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து, மருத்துவ நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட் மே 5-ம் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்தது. மேலும், மாநில அரசுகளின் மனுக்கள் மீது இரண்டு நாட்களில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

English Summary : Medical entrance exam case postponed to May 5th by Supreme Court.