சென்னை மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு, வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் அடுத்தகட்ட மெட்ரோ ரயில் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேதினப் பூங்கா முதல் சைதாப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணியை நிறுத்த தனியார் நிறுவனத்துக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் திடீரென உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி 80 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது. மேதின பூங்கா முதல் சைதாப்பேட்டை வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கான சுரங்கப்பாதை பணியை ரஷியா நாட்டைச் சேர்ந்த மாஸ்மெட்ரோ நிறுவனமும், கேமன் இந்தியா நிறுவனமும் இணைந்து செய்துவந்தன.
கடந்த மே மாதம் 1ஆந் தேதி மாஸ்மெட்ரோ நிறுவனத்தினர் பணியை பாதியில் நிறுத்திவிட்டு ரஷியா சென்றுவிட்டனர். இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதுகுறித்து சென்னையில் உள்ள ரஷியா நாட்டு துணைத்தூதர் கோட்டோவ்வை சந்தித்து புகார் கூறப்பட்டது. ரஷ்ய நிறுவனம் வெளியேறிய போதிலும் கேமன் இந்தியா நிறுவனம் மட்டும் தொடர்ந்து இந்த பணியை செய்துவந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு அவர்களால் பணியில் முன்னேற்றத்தை காண்பிக்க முடியவில்லை. குறிப்பாக மேதின பூங்கா முதல் டி.எம்.எஸ். இடையே 2 வழித்தடங்களிலும் சராசரியாக 47 முதல் 50 சதவீதமும், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே 88 சதவீதமும் பணிகள் நிறைவடைந்து உள்ளன.
இவ்வாறு சென்று கொண்டிருந்தால் திட்டமிட்ட தேதியில் ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்படும். காலதாமதமாக பணி செய்துவரும் கேமன் இந்தியா நிறுவனம் பணியை தொடர வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கோயம்பேடு, திருமங்கலம், ஷெனாய்நகர், கீழ்ப்பாக்கம் வழியாக எழும்பூருக்கு 2016-ம் ஆண்டு மார்ச் மாதமும், 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் அனைத்து பகுதிகளிலும் சேவை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
English Summary: Metinap park-Saidapet metro stop work order