தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக காலையில் பணிக்குச் செல்வதற்காக புறப்பட்ட பல பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மெட்ரோ ரயில் சேவைகள் காலை 6 மணி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை ரயில் சேவைகளை இயக்கும்போது ஒரு வழித் தடத்தில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் – கோயம்பேடு – அசோக் நகர் – பரங்கிமலை பகுதிகளில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மின் இணைப்பில் உருவான பிரச்னை காரணமாக இந்தச் சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும், மற்றொரு வழித் தடத்தில் வழக்கம்போல ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. காலை 9 மணிக்கு அப் பிரச்னை சரி செய்யப்பட்டு மெட்ரோ ரயில் போக்குவரத்து இரு வழித் தடங்களிலும் சீராக்கப்பட்டது.