ஏஜி- டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் நடைபெற்று வரும் இறுதிகட்ட கட்டுமானப்பணிகள் உள்பட அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுரை வழங்கினார்.
கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக அலுவகத்தில், சென்னை மெட்ரோ ரயில் திட்ட செயலாக்கத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடத்தில் சேவைகள் தொடங்கப்படவுள்ள ஏஜி-டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான சுரங்கப்பாதையில் நடைபெற்றுவரும் இறுதிகட்ட கட்டுமானப் பணிகள் மற்றும் அமைப்புகளை நிறுவும் பணிகளிள் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். அனைத்துப் பணிகளையும் விரைவில் முடிக்குமாறு அறிவுரை வழங்கினார். மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித் தடத்தில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் விரிவாக்கத் திட்டத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் உள்பட பலர் பங்கேற்றனர்.