சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான சேவை தொடர்ந்து பொதுமக்களுக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒருசில பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக சுரங்கம் வெட்டும் பணி கடந்த ஒன்றரை மாதங்களாக பணிகள் முடங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணா சாலை வழியாக சைதாப்பேட்டை வரையிலும் சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரையிலும் 2 வழித்தடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சுரங்கம் தோண்டும் பணிகளுக்காக இரண்டு ராட்சத எந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இந்த எந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன. இந்நிலையில் பூமிக்கு அடியில் நடக்கும் பணிகள் வெளியே தெரிவதில்லை. தினமும் சுரங்கத்தில் இருந்து ஏராளமான மண் தோண்டி எடுக்கப்பட்டு, அவை இரவில் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் வெளியே கொண்டு செல்லப்பட்டன. ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரம் லாரி மணல் வெளியேற்றப்பட்டு வந்தது. அதை திருநீர்மலை பகுதியில் உள்ள பள்ளங்களில் கொட்டப்பட்டது. இதுவரை சுமார் 4 லட்சம் லாரி மணல் கொட்டப்பட்டுள்ளது.
சுரங்கத்திற்குள் கடினமான பாறை மற்றும் இறுக்கமான மண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் எதிர்பார்த்த வேகத்தில் பணிகள் நடைபெறவில்லை. இதனால் ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களுக்கும் மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ரஷிய நிறுவனம் வெளியேறியது. புதிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் திட்ட மதிப்பீட்டில் செலவினம் அதிகரித்துள்ளதால் கூடுதலான நிதியை மாநில அரசு ஏற்கும்படி மத்திய அரசு கூறி வருகிறது. அதை மாநில அரசு ஏற்கவில்லை. இது போன்ற காரணங்களால் கடந்த ஒன்றரை மாதங்களாக பணிகள் முடங்கி உள்ளன.
சுரங்கம் தோண்டும் பணிகள் மற்றும் மண்ணை அள்ளி அப்புறப்படுத்தும் பணிகளுக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த தனியார்களிடம் இருந்து 50–க்கும் மேற்பட்ட பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்களை வாடகைக்கு அமர்த்தி இருந்தனர். இப்போது பணிகள் நடக்காததால் எந்திரங்களும் சுரங்க பாதைகளில் சிக்கி கிடக்கின்றன. பல நாட்கள் இந்த எந்திரங்களை இயக்காமல் இருந்தால் துருப்பிடித்து எந்திரங்கள் சீரழிந்து விடும் என்று உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சினை இருப்பதால் எந்திரங்களை வெளியே எடுக்கவும் அனுமதிக்கவில்லை.
இதனால் எந்திர உரிமையாளர்கள் போராட முடிவு செய்துள்ளதாக மண் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் கத்திப்பாரா ஜெனார்த்தனன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது: எந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் பழுதாகும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே ஒப்பந்த நிறுவனங்கள் ரூ.66 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது. இதனால் எந்திர உரிமையாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் எந்திரங்களுக்கு பழுது ஏற்பட்டால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே வருகிற 31ஆம் தேதி நடைபெறும் சங்க விழா கூட்டத்தில் எங்கள் எந்திரங்களை திருப்பி கேட்டும், வாடகை பாக்கியை உடனே கேட்டும் போராட முடிவு செய்ய இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
English Summary : JCB owners plan to fight due to danger of repair in machinery, since Metro subway work is stopped for more than one month.