‘டிபெக்ஸ்போ – 18’ எனும் ராணுவ கண்காட்சி, சென்னையில் நாளை துவங்குகிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், நாளை, 14ம் தேதி வரை, சென்னை அருகே உள்ள திருவிடந்தையில், ‘டிபெக்ஸ்போ – 18’ எனும், 10வது ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது. 12ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, அதிகாரபூர்வமாக கண்காட்சியை துவக்கி வைக்கிறார். பின், இந்திய நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளையும், கருத்தரங்குகளையும் துவக்கி வைக்கிறார். சென்னையில் முதல் முறையாக, முப்படைகளும் பங்கேற்பதால், மிகப் பிரம்மாண்டமாக, இந்த கண்காட்சியை, மத்திய பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது. அரங்குகள் அனைத்தும் அமைக்கப்பட்டு, அதில், ராணுவ தளவாடப் பொருட்களை பார்வையிடும் வகையில், தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

பிரதமர் பங்கேற்பதால், கண்காட்சி நடக்கும் பகுதிகள், மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களைத் தவிர்க்க, உயர்நிலைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தமிழக போலீசாரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். கண்காட்சி பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், பாதுகாப்பு துறை சார்பில், தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 800, ‘மீடியா’ : சென்னை ராணுவ கண்காட்சி குறித்து, செய்தி சேகரிப்பதற்காக, 800க்கும் மேற்பட்ட, ‘மீடியா’ நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக, இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில், 600 மீடியாக்கள், தமிழகத்தைச் சேர்ந்தவை. புதுடில்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட, பிற மாநிலங்களைச் சேர்ந்த மீடியாக்களுடன், 25 வெளிநாட்டு செய்தி நிறுவனங்களும், இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.

English Summary: Military exhibition begins Tomorrow.