வெளிநாடுகளின் கலாசாரம், கல்வி, தொழில்நுட்பத்தை அறிவதற்காக அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்தநாள் பள்ளிக் கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழாவாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பரிசுகளை வழங்கிப் பேசியது:
அரசுப் பள்ளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் 50 மாணவர்கள் கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், கலாசாரத்தைத் தெரிந்து கொள்வதற்காக டிசம்பர் மாத இறுதியில் பின்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு 25 மாணவர்களும், கனடாவுக்கு 25 மாணவர்களும் அழைத்துச் செல்லப்படுவர். இதற்காக அரசின் சார்பில் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சிறப்பாசிரியர்கள் சான்றிதழ் பிரச்னை: இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சிறப்பாசிரியர் தேர்வில் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் பிரச்னை உள்ளவர்களுக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் தொடர்புடைய கோட்டாட்சியர் அல்லது சார் ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்று பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும்.
ஜனவரி 1-இல் மழலையர் வகுப்புகள்: வரும் ஜனவரி 1-ஆம் தேதி அங்கன்வாடிகளில் உள்ள 52,412 குழந்தைகளுக்கும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும். இதில் பள்ளிக் கல்வித் துறையில் கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர் என்றார்.
பங்கேற்றோர்: முன்னதாக இந்த விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். இதில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜெகந்நாதன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, சென்னை மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறந்த நூலகர்களுக்கு எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது: சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் சிறந்த நூலகர்களுக்கு நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் சிறப்பாக செயல்பட்ட 32 மாவட்ட நூலகர்கள், கன்னிமாரா பொது நூலகர் என 33 நூலகர்களுக்கு எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, வெள்ளிப் பதக்கம், தலா ரூ.5 ஆயிரம் ஆகியவை வழங்கப்பட்டன.
மாநில அளவில் அதிக உறுப்பினர்கள், அதிக புரவலர்கள், அதிக நன்கொடைகள் பெற்ற 12 நூலகங்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் நூலக இயக்கம் வளர முனைப்புடன் பங்காற்றி நூலக விழிப்புணர்வை ஏற்படுத்திய 31 மாவட்ட வாசகர் வட்டத் தலைவர்களுக்கு நூலகர் ஆர்வலர் விருது, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.