mtc-24102015சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி.) சார்பில், புதிதாக இரண்டு நடமாடும் குழுக்கள் (மொபைல் டீம்) அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவினர் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சீரான பேருந்து இயக்கம் ஆகியவற்றை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் 3 ஆயிரம் பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போக்குவரத்து துறை சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல்கட்டமாக, சட்டப் பேரவையில் தமிழக அரசு அறிவித்தபடி, சோதனை அடிப்படையில் 10 மாநகரப் பேருந்துகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பேருந்துகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், விபத்து இல்லாத சீரான பேருந்து இயக்கத்தை உறுதி செய்யும் வகையில் 2 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட சென்னைக்கு ஒரு குழு, தென் சென்னைக்கு ஒரு குழு என இந்த இரண்டு நடமாடும் குழுவிலும் உதவிப் பொறியாளர் தலைமையில் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என 3 பேர் இடம்பெற்றிருப்பர். இந்தக் குழுவினர் சர்ச்சைக்கு உரிய வழித் தடங்களில் தொடர் கண்காணிப்பில் நாள் முழுவதும் ஈடுபட்டு வருவார்கள். மேலும், பேருந்து நிறுத்தம், பேருந்து முனையங்களில் ஓட்டுநர்களைச் சந்தித்து பாதுகாப்பாக பேருந்துகளை இயக்குவது குறித்த ஆலோசனைகளையும் இந்த குழுவினர் வழங்குவார்கள்

அதுமட்டுமின்றி பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரைகளை வழங்கி ஆட்டோவை அங்கிருந்து அப்புறப்படுத்தி, பேருந்தை நிறுத்த வழி செய்வர். மேலும் பேருந்து பயணிகளுக்கும் இந்தக் குழுவினர் அறிவுரைகளை வழங்குவர். குறிப்பாக படிக்கட்டில் பயணிக்க வேண்டாம் என்றும், பேருந்து நின்ற பின்னர் இறங்கவும் பயணிகளை இந்த குழுவினர்அறிவுறுத்துவர். இந்தக் குழுக்கள் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுரைகளை வழங்குவதோடு, பேருந்து படிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அறிவுரைகளை வழங்கி சீரான, பாதுகாப்பான பேருந்து இயக்கத்தை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அறிவுரைகளுக்குப் பிறகும் தொடர்ந்து விதிமுறைகளை மீறுவோர் குறித்து இந்தக் குழு அளிக்கும் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.English summary-Mobile team & cctv to be introduced in mtc buses