சென்னை பொதுமக்கள் பெரிதும் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமானது கொசுத்தொல்லை. கொசுக்களை ஒழிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தற்போது ஒரு புதிய திட்டத்தைத் தயாரிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் தற்போது கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி சார்பில் வாகனங்கள் மூலம் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புகை மருந்தினால் எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை என்றும், கொசுக்களை ஒழிக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்களின் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்த மாநகராட்சி நிர்வாகம் கொசு உற்பத்தி குறித்தும் கடந்த கால தகவல்களைச் சேகரித்து, அவற்றைக் கொண்டு கொசுப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்கான திட்டத்தை தீட்டவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியபோது இத்தனை நாட்களாக கொசுக்களைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் மட்டுமே பயன்படுத்தி வந்ததாகவும், கொசுக்கள் எவ்வாறு உற்பத்தியாகின்றன, அவற்றை கட்டுப்படுத்துவது எவ்வாறு போன்ற ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்த அவர், இனிமேல் சென்னையில் வார்டு வாரியாக கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டுபிடித்து அந்த இடங்களில் அடிக்கப்பட்ட மருந்துகள் எதனால் வேலை செய்யவில்லை என்பதை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கொசுக்களால் ஏற்படும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் கிடைக்கவிருக்கும் தகவல்களின் அடிப்படையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய திட்டம் வகுத்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
English Summary : The new modern technology to eradicate mosquitoes in Chennai modern technology.