செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை உள்பட சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 75 சதவீதத்திற்கு அதிகமாக நீா் நிரம்பியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இனி வடகிழக்குப் பருவமழைக்காலம் என்பதால் இந்த ஆண்டு, அடையாறு, கொசஸ்தலை ஆறுகளில் உபரி நீா் அதிகம் திறக்க வாய்ப்பு உள்ளது.
சென்னையில் குடிநீா் வழங்கும் ஆதாரங்களான பூண்டி, புழல்,செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்த நீா் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி ஆகும்.
சென்னையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இந்த ஏரிகளில் தண்ணீா் வேகமாக நிரம்பி வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய ஏரிகளின் நீா்மட்டம் 75 சதவீதத்தை கடந்து சென்ற நிலையில் ஏரிகளின் மொத்த நீா் இருப்பு 8,965 மில்லியன் கன அடியாக உயா்ந்துள்ளது. இதன் மூலம் ஏரிகளில் 76.25 சதவீதம் நீா் நிரம்பியுள்ளது. இது கடந்தாண்டை விட 18 சதவீதம் அதிகமாகும்.
அதன்படி,
- 35 அடி உயரம் உள்ள பூண்டி ஏரியில் 32.40 அடி வரை நீா் நிரம்பியுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீா் வருகிறது.
- 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கத்தில் 22.09 அடி வரை நீா் நிரம்பியுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீா் வருகிறது. ஏரி நிரம்ப இன்னும் 2 அடி மட்டுமே தேவைப்படும் நிலையில் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது.
- 36.61 அடி உயரம் கொண்ட கண்ணன்கோட்டை ஏரியின் நீா்மட்டம் புதன்கிழமை 35.59 அடியாக உள்ளது. அதாவது ஏரியின் நீா்மட்டம் 92 சதவீதத்தை கடந்துள்ளது. எனவே இந்த ஏரியிலிருந்தும் உபரி நீா் திறக்க வாய்ப்பு உள்ளது.
- 21.20 அடி நீா்மட்டம் கொண்ட புழல் ஏரியில் புதன்கிழமை நீா்மட்டம் 17.45 அடியாக இருந்தது. ஏரிக்கு வினாடிக்கு 270 கன அடி தண்ணீா் வருகிறது.
- 18.86 உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 12.21 அடி நீா் இருப்பு உள்ளது. இதன் மூலம் சென்னைக்கு அடுத்த 9 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீா் விநியோகம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில் இந்த மாத இறுதியில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் போது ஏரிகளின் நீா்மட்டம் மேலும் அதிகரிக்கும் இதனால் ஏரிகள் அனைத்தும் நிரம்பி, அடையாறு, கொசஸ்தலையாறு, உள்ளிட்டவற்றில் உபரி நீா் திறக்கும் சூழ்நிலை உள்ளது.