கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மாநிலங்களவை எம்.பி. என்ற வகையில் தனக்கு கிடைத்த ஊதியம் முழுவதையும் பிரதமரின் நிவாரண நிதிக்காக வழங்கினார்.
2012-ல் மாநிலங்களவை நியமன எம்.பி.யாக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்தது.
மாநிலங்களவை எம்.பி. என்ற வகையில் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 6 ஆண்டுகளில் ஊதியம் மற்றும் மாதப்படிகள் அனைத்தையும் சேர்த்து சுமார் ரூ.90 லட்சம் கிடைத்துள்ளது. இந்தத் தொகையை அப்படியே பிரதமர் நிவாரண நிதிக்கு அவர் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “சச்சினின் இந்த நற்செயலுக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இன்னலில் இருப்பவர்களுக்கு உதவ இந்தத் தொகை பயன்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் தனது பதவிக் காலத்தில், பெரும்பாலான நேரங்களில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவில்லையென்ற புகார் இருந்து வந்தது.
இந்நிலையில் தனது எம்.பி. மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.4 கோடி தொகையை பல்வேறு திட்டங்களுக்கு வழங்கியுள்ளார். சுமார் 185 திட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சன்சத் கிராம் ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் அவர் ஆந்திரா, மகாராஷ்டிராவில் 2 கிராமங்களைத் தத்தெடுத்துள்ளார். – பிடிஐ
English Summary: MP Sachin Tendulkar donates his salary to PM’s Relief Fund.