கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் கர்ப்பப் பை மாற்றுச் சிகிச்சை குறித்த தேசிய மாநாடு இவ்வாண்டு நாளை முதல் இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தின் இயக்குநர்கள் டாக்டர் காமராஜ், டாக்டர் ஜெயராணி காமராஜ் ஆகியோர் ஆகியோர் கூறியதாவது:

ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் இந்த மாநாட்டில் உலகிலேயே முதல்முறையாக கர்ப்பப் பை மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்த ஸ்வீடன் மருத்துவ நிபுணர் பிரான்ஸ்ட்ராம் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். பிறக்கும் பெண் குழந்தைகளில், 4000-த்தில் ஒரு பெண் குழந்தைக்கு கர்ப்பப்பை இல்லாத பிறவிக் குறைபாடு உள்ளது; மேலும் விபத்து, புற்று நோய் காரணமாக கர்ப்பப்பை அகற்றப்படுகிறது. இதனால் வாடகைத் தாய் முறை மூலமே குழந்தைப் பேறு அடையும் நிலை உள்ளது.

ஆனால், அனைத்து நாடுகளிலும் வாடகைத் தாய் முறை அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், குழந்தைப் பேறு இல்லாத பெண்ணின் சகோதரி அல்லது உறவினரின் கர்ப்பப்பையை அறுவைச் சிகிச்சை மூலம் தானமாகப் பெற்று, மாற்று சிகிச்சை செய்து குழந்தைப் பேறு அடைய வைத்து சாதனை படைத்துள்ளார் ஸ்வீடன் நிபுணர் பிரான்ஸ்ட்ராம். இதுவரை 22 பெண்களுக்கு கர்ப்பப் பை மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த மாநாட்டில் வெளிநாடுகள் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து 1,000 மகளிர்-மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : 5th year National Conference for Cervical alternative treatment was conducted in Chennai.