திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னர் மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை அம்ச வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 10 மணியில் இருந்து 11 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நவராத்திரி கொலு ஆஸ்தானம் நடந்தது
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பறக்கும்படை அதிகாரி ரவீந்திராரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.