நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை பள்ளிகள் செய்துதர வேண்டும் என பள்ளி கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
அடுத்த ஆண்டு மே 5-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தும் வகையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய சுற்றறிக்கை அனுப்புமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
அதுபோல, விருப்பமுள்ள மாணவர்களைக் கண்டறிந்து, நீட் தேர்வுக்கு அவர்கள் விண்ணப்பிப்பதற்கான உரிய ஏற்பாடுகளை ஆசிரியர்களும், தலைமையாசிரியர்களும் செய்யவேண்டும்.
குறிப்பாக, கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் சிறப்பு கவனம் செலுத்தி, அந்த மாணவர்கள்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனைத்து வசதிகளையும் பள்ளிகள் செய்துதர வேண்டும்.
விருப்பமுள்ள அனைத்து மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனரா என்பதை தலைமையாசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.