சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் வெற்றிகரமாக இயங்கி வந்த நோக்கியா செல்போன் தயாரிக்கும் நிறுவனம் சமீபத்தில் மூடப்பட்டது அந்த பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில் நோக்கியா கம்பெனியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் மத்திய அரசின் பணிக்குழு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது சென்னை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் செல்போன் மற்றும் அதன் உதிரிபாக உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான அதிவிரைவு பணிக் குழுவை மத்திய அரசின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை சமீபத்தில் அமைத்துள்ளது. இந்த பணிக்குழுவுக்கு இந்திய செல்லுலார் சங்கத்தின் (ஐ.சி.ஏ.) தலைவர் பங்கஜ் மொகிந்த்ரோ தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நோக்கியா, லாவா, சோனி, மைக்ரோசாப்ட், மைக்ரோமாக்ஸ் உள்பட பல்வேறு செல்போன் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது செயல்பாட்டை தொடங்கிய இந்தப் பணிக்குழு பல மாநிலங்களின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 2019ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் செல்போன் உற்பத்தியை 500 மில்லியனாக உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தக் குழு செயலாற்றி வருவதாகவும், உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த செல்போன் உற்பத்தியில் இந்தியா 25 சதவீத இடத்தை பிடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் செல்போன் உற்பத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதன்மூலம் நாட்டு மக்களுக்கு கூடுதலாக 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்த குழு பணிபுரிந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பணிக்குழுவின் முக்கிய பணியாக சமீபத்தில் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட நோக்கியா செல்போன் ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பூர்வாங்கப் பணியில் இந்தப் பணிக்குழு இயங்கி வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர் தங்கமணி, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் ஆகியோரை நேற்று தலைமைச்செயலகத்தில் பங்கஜ் மொகிந்த்ரோ, பணிக்குழுவின் துணைத் தலைவர் ஜோஷ் பல்கர் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பங்கஜ் மொகிந்த்ரோ, “நோக்கியா கம்பெனி மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இதற்கு தமிழக அரசு என்னென்ன செய்ய முடியும்? என்பதையும், அதை ஒரு தொகுப்பாக அளிக்க வேண்டும் என்பதையும் தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். இதுதொடர்பாக தமிழக அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் நோக்கியா நிறுவனத்தை தற்போது கொண்டுவர நாங்கள் விரும்பவில்லை. இதில் மத்திய அரசும் தமிழக அரசும் கூறும் விஷயங்களை முன்வைத்து, அதன் பின்னரே நோக்கியா நிறுவனத்தை பேச்சுக்கு அழைக்க விரும்புகிறோம். இதில் நல்ல முடிவு கிடைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

தொழில் வளர்ச்சியில் தமிழக அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. அதன் நிர்வாகத் திறமையால்தான் இங்கு மிகப் பெரிய நிறுவனங்கள் வருகின்றன. தற்போது கொள்கை அளவிலான பேச்சுவார்த்தைதான் நடத்தப்படுகிறது. இதில் ஏற்படும் வளர்ச்சியை பின்னாளில்தான் கூற முடியும்.

நோக்கியாவை மீண்டும் செயல்படச் செய்வதற்கான பூர்வாங்க பணிகளை தொடக்கியிருக்கிறோம். செல்போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் எங்கள் பணியில் நோக்கியா மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நோக்கியா நிறுவனம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் எங்கள் பணியில் 35 சதவீதம் நிறைவு பெற்றுவிடும். வேலை வாய்ப்பிலும் தமிழகம் நல்ல பங்களிப்பைக் கொடுக்கும்.

இந்தியாவில் செல்போன் உற்பத்தி தொடர்பாக வேறு பல மாநிலங்கள் கூறிய கருத்துகளை, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

English Summary : Negotiation took place to re-open Nokia plant in Chennai near Sri perumbudur.