கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் நேபாள நாட்டில் வரலாறு காணாத பூகம்பம் ஏற்பட்டு அங்கு 3000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நேபாளத்தில் சுற்றுலா சென்ற இந்தியாவை சேர்ந்த சுமார் 125 பேர் அங்கு சிக்கியிருப்பதாகவும் அவர்கள் உடனடியாக நாடு திரும்ப தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்படியும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
பிரதமரின் உத்தரவை அடுத்து நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, இந்திய விமானப் படையின் “சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ்’ ரக விமானம் அந்நாட்டுக்கு நேற்று முன் தினம் விரைந்தது. மேலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து ஏராளமான நிவாரணப் பொருள்களுடன் பேரிடர் மீட்புப் படையினர்களும் நேபாளம் சென்றனர்.
இந்நிலையில் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த 5 பேர் நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினர். இவர்களில் இருவர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் நேபாளத்தில் நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் தாங்கள் பத்திரமாக நாடு திரும்பி உதவிய இந்திய மீட்புக் குழுவினர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தனர். சென்னை திரும்பிய ஐந்து பேர்களையும் அவர்களுடைய உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
English Summary : 5 Chennai tourists returned safely from Nepal after the earthquake.