வெறும் கூச்சலும், சண்டைகளும், தனிப்பட்ட தாக்குதல்களுமே விவாத நிகழ்ச்சிகளாக மாறிவிட்ட நிலையில் ஒருவர் தரப்பை இன்னொருவர் ஆரோக்கியமாகப் பிரதிபலித்து விமர்சிக்கும் அறிவுப்பூர்வமான நிகழ்ச்சியாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “நேர்படப் பேசு” நிகழ்ச்சி திகழ்கிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இந்நிகழ்ச்சியில் அன்றன்றைக்கு பேசப்படும் தலைப்புகள் பார்வையாளர்களுக்கு அறிவுப்பூர்வமான தெளிவையும் பார்வைகளையும் வழங்கும் வண்ணம் தயாரிக்கப்படுகிறது. அரசியல், சமூகம், பொது ஆரோக்கியம், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சுற்றுச்சூழல், பெண்ணியம் என மக்களைப் பாதிக்கும் அன்றாட நிகழ்வுகள் தொடங்கி நம்மைக் கண்ணுக்குத் தெரியாமல் பின்னியிருக்கும் சர்வதேச வலை வரை விவாதிக்கும் நிகழ்ச்சி நேர்படப் பேசு.
அரசியல் தலைவர்கள், பொருளாதார அறிஞர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், கள ஆய்வாளர்கள், சமூகப் போராளிகள், வழக்கறிஞர்கள், அரசு நிர்வாகிகள் என ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுனர்களும் கைநிறைய தகவல்களோடும், மக்கள் நலன் சார்ந்த அக்கறையுடன் விவாதிக்கும் நிகழ்ச்சி இது. நாம் வாழும் சமூகம், நமது பண்பாடு, நமது சமகால வாழ்க்கைச் சூழலைப் புரிந்துகொள்ள உதவும் அறிவுக்களமாக விளங்கும் நிகழ்ச்சி நேர்படப் பேசு. இன்று நாள்தோறும் வெவ்வேறு தொலைக்காட்சிகள் தமிழில் நடத்தும் விவாத நிகழ்ச்சிகளுக்கு முன்னோடி நேர்படப் பேசு-தான். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு தினந்தோறும் இரவு 11:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.இந்நிகழ்ச்சியை வேங்கடப்பிரகாஷ், க.கார்த்திகேயன், ச.திலகவதி, வேதவள்ளி ஆகியோர் நெறிப்படுத்துகின்றனர்.