சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் கைதிகள் தயாரித்த ஆடைகளை விற்பனை செய்யும் விற்பனையகம் ஒன்று புழல் சிறை வளாகத்திலேயே நேற்று திறக்கப்பட்டது.
சென்னை புழல் சிறை வளாகத்தில் தண்டனை பெற்ற சிறைவாசிகளுக்கு இரு பிரிவுகளாக ஆடை வடிவமைக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியின் முதல் பிரிவில் 70 பேரும், 2-ஆம் பிரிவில் 50 பேரும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பயிற்சி பெறும் சிறைவாசிகளுக்கு சட்டைகள், கால் சட்டைகள், டி.சர்ட், குழந்தைகளுக்கான ஆடைகள் தைக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சிபெற்ற சிறைவாசிகள் சட்டைகளைத் தைத்து வருகின்றனர். சிறைவாசிகள் தைக்கும் சட்டைகளை, சிறை வளாகக் கடையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த ஆடை விற்பனைக் கடையை புழல் சிறைத் துறை துணைத் தலைவர் ராஜேந்திரன் நேற்று திறந்து வைத்தார்.
தற்போது சிறை வளாகக் கடையில் விற்பனையாகும் ஆடைகள் ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சிறை வளாகத்தில் கடையில் ஆடைகளுக்கு இஸ்திரி செய்யும் பணியையும் சிறைவாசிகள் செய்து தருகின்றனர். இஸ்திரி செய்யும் ஆடை ஒன்றுக்கு ரூ.3 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை கடையில் ஆடைகளும், பெரியவர்களுக்கான கால் சட்டை, பல்வேறு ஆடைகள் விரைவில் விற்பனைக்கு வரும் என சிறைத் துறை துணைத் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார். விழாவில் சிறைக் கண்காணிப்பாளர் அன்பழகன், கூடுதல் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, சிறை அலுவலர் ஜெயராமன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
English Summary:New clothing stores opening in chennai puzhal jail