சென்னையில் புதிதாக 9 இடங்களில் அமைக்கப்பட்ட அம்ருத் பூங்காக்களை, காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
நெல்லையில் அதிநவீனபேருந்து நிலையத்துக்கு அடிக்கல்: திருநெல்வேலி மாநகராட்சி சந்திப்புப் பகுதியில் பெரியார் பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தை இடித்து விட்டு 3 லட்சத்து 31 ஆயிரத்து 407 சதுர அடி பரப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் திங்கள்கிழமை நாட்டப்பட்டது. புதிதாக கட்டப்படவுள்ள பேருந்து நிலையத்தின் தரைகீழ் தளத்தில் 1,629 இருசக்கர வாகனங்களும், 106 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கான இடவசதி உள்பட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இதர நகராட்சிகள்: தேனி மாவட்டம் சின்னமனூரில் புதிய பேருந்து நிலையம், காரைக்குடியில் இருசக்கர வாகன நிறுத்துமிடம், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சியில் அலுவலகக் கட்டடம், தேனி ஆண்டிபட்டி பேரூராட்சியில் பாப்பம்மாள்புரத்தில் சமுதாயக் கூடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
நடமாடும் வாகனங்கள்: சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டம், மூலதன திட்டத்தின் கீழ் கட்டட இடிபாடுகளைத் தொய்வின்றி அகற்றும் பணிக்காக 15 நவீன வாகனங்களையும், காசநோய் கண்டறிவதற்கான 7 நடமாடும் வாகனங்களையும் முதல்வர் இயக்கி வைத்தார்.
இறைச்சிக்கூட கழிவுகள்-பூங்காக்கள்: சென்னை புளியந்தோப்பு பகுதியில் இறைச்சிக் கூட கழிவுகளைக் கொண்டு எரிவாயு மற்றும் மின்சாரம் தயாரிக்கும் கலன்களையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ், மணலி நியூ டவுன், சி.பி.எஸ்.,-6, சி.பி.எஸ்.,-2, எருக்கஞ்சேரி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, நொளம்பூர் எம்.சி.கே. லே அவுட் சாலை, அடையாறு ஏ.ஜி.எஸ். காலனி, சோழிங்கநல்லூர் சக்தி கார்டன் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட ஒன்பது பூங்காக்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மாற்றுத் திறனாளிகள்: சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், சாந்தோம் பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவான விளையாட்டுக் கருவிகள், தகவல் பலகை ஆகிய வசதிகளுடன் கூடிய உணர்வுப் பூங்காவை முதல்வர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.