சென்னையில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அறிவியல் அறிவை வளர்க்க உதவும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் அவ்வப்போது சூரிய கிரகணம், சந்திர கிரகணம் மற்றும் விண்ணில் நடைபெறும் அற்புத நிகழ்ச்சிகளை தொலைநோக்கிகளில் காண்பித்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று பூமியில் பள்ளத்தாக்குகள் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து, பிர்லா கோளரங்கில் திரையிடப்பட்டது. இந்த புதிய காட்சியை 270 பேர் கண்டுகளித்தனர். இந்தக் காட்சி தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு திரையிடப்பட உள்ளதாகவும் விருப்பம் உள்ளவர்கள் இந்த அரிய காட்சியை காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பெரியார் அறிவியல், தொழில்நுட்ப மையத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காட்சியை அறிமுகப்படுத்தி அதன் இயக்குனர் கூறியதாவது: பூமியைச் சுற்றியுள்ள குறுங்கோள்கள், எரிகற்கள், வால் நட்சத்திரம் போன்றால் ஏற்பட்ட பாதிப்பு, டைனோசர் போன்ற உயிரினங்கள் உயிரிழந்ததற்கான காரணம் உள்ளிட்டவற்றை வானவியல் காட்சி விளக்கும். 30 நிமிடங்கள் ஓடும் காட்சி நான்கு மாதங்களுக்கு, ஒவ்வொரு நாளும் மாலை 3.45 மணி, 4.30 மணிக்கு என இரண்டு காட்சிகள் திரையிடப்படும். பிர்லா கோளரங்கத்தை நவீனப்படுத்த ரூ.10 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இதில், நடைபெற்றுவரும் பணிகள் இன்னும் சுமார் 11 மாதங்களில் முடிவடையும் என்றார்.
இதையடுத்து, ஆவடி மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறையின் போர் வாகன ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் சிவக்குமார் பேசியதாவது: எங்கள் துறையின் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், வாகன உற்பத்தி உள்ளிட்ட 7 பிரிவுகளைச் சேர்ந்த மாதிரிகளுக்கான பிரத்யேகக் காட்சிக் கூடம் பிர்லா கோளரங்கத்தில் விரைவில் அமைக்கப்படவுள்ளது. இதில் ராக்கெட் தயாரிப்பு, போர் வாகனங்கள், டேங்கர், பீரங்கிகள், விண்வெளி வீரர்களின் உடை, உணவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காட்சிப்படுத்தப்படும் என்றார். பிர்லா கோளரங்கத்தில் ஏற்கெனவே ஆறு காட்சிக்கூடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
English summary – Birla Planetarium unveiled its new full-dome show called Impact Earth