ரயில் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தியாவின் எந்த மூலையில் இருந்து எந்த ஊருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கைகள் குறைந்து கொண்டே வரும் வகையில் ரயில்வே துறையின் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற மென்பொருளை பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் பயன்படுத்தும் நவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே சொத்தினை வெவ்வேறு அலுவலகங்களில் முறைகேடாக பத்திரம் பதிவு செய்வதைத் தடுக்க முடியும்.

எந்த ஊரில் உள்ள சொத்தையும் எந்த ஊரிலும் பத்திரப் பதிவு செய்யும் வசதி தற்போது அறிமுகமாகி உள்ளது. அதனால், ஒரு சொத்தினை வெவ்வேறு இடங்களில் விற்பனை செய்யும் முறைகேடான சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்படும். இதற்கான நவீன மென் பொருள் தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் நவீனமுறை அறிமுகம் செய்யப் பட்டதும், ஒரு சொத்து ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதும், தானியங்கி முறையில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அதனால் அதே சொத்துக்கு வேறொரு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.

பத்திரம் பதியும்போது தாய் அல்லது மூலப் பத்திரம் இருந்தால்தானே பதிவு செய்ய முடியும். அப்படி இருக்கும்போது வெவ்வேறு இடங்களில் பத்திரம் பதிவு செய்வது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி சிலருக்கு எழும். அரசு புறம்போக்கு நிலங்களுக்கு தாய் பத்திரம் வழங்கப்படுவதில்லை. ஒருவரிடம் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கரை மட்டும் அவர் விற்கலாம். அப்போது தாய் பத்திரத்தை அவர் தருவதில்லை. அந்த நிலத்தை கடைசியாக வாங்குபவருக்கே தாய் பத்திரம் கிடைக்கும். இது போன்ற இடங்களை வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யும்போது முறைகேடு நடைபெறும் அபாயம் உள்ளது.

தற்போது சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சொத்துகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் அன்றைய தினம் மாலையே கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், புதிய முறையில் தானியங்கி முறையில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். அதனால் ஏற்கெனவே பத்திரப் பதிவு செய்யப்பட்ட சொத்தினை வேறு ஒரு இடத்தில் பதிவு செய்ய முடியாது. அவ்வாறு பதிவு செய்ய முற்பட்டால், அந்த சொத்து ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது என்ற தகவல் சமிக்ஞை மூலம் தெரிய வருவதுடன், சம்பந்தப்பட்ட நபரும் பிடிபடுவார். இந்த நவீனமுறை விரைவில் அறிமுகமாகிறது.

இடம், நிலம், வீடு அல்லது குடியிருப்பு என எதனைப் பதிவு செய்தாலும் வாங்குபவரும், விற்பவரும் தற்போது நேரில் வந்து புகைப்படம் எடுக்க வேண்டும். அவர்களின் கைரேகையும் பதிவு செய்யப்படும். செல்போன் எண்களும் பெறப்படுகிறது. செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பத்திரப் பதிவுத் துறையின் ஆவணங்கள் அனைத்தையும் கம்ப்யூட்டர்மயமாக்கும் பணியை டிசிஎஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மேலும் நமது சொத்தினை அபகரிக்கும் நோக்கில் யாராவது பத்திரம் பதிவு செய்ய முற்பட்டால், அப்போது கைரேகை “மேட்ச்” ஆகாது. அதையடுத்து சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ்.-ல் அத்தகவல் அனுப்பப்படும். இதை வைத்து முறைகேட்டை தடுத்துவிட முடியும் என்று பத்திரப்பதிவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

English Summary: New Softwares to avoid frauds in Registration Department.