15THBOY_1844059f
ஆழ்துளை கிணற்றில் சிறு குழந்தைகள் தவறி விழுந்து உயிரை மாய்த்து கொள்ளும் சோகமான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதை அடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் 4ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் திலீப்குமார், கோதண்டபாணி ஆகியோர் இணைந்து ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்கும் வகையில் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து அந்த மாணவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தக் கருவியில் குழந்தையின் நிலையை நேரடியாக பார்க்கும் ’விதம்ராஸ்பெரிபை’ என்கிற அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 மெகாபிக்ஸல் கேமரா மற்றும் எல்இடி பல்ப் உதவியுடன் தேவையான வெளிச்சத்தில் கணினி மூலம் பார்க்க முடியும். உள்ளே குழந்தை எந்த நிலையில் இருந்தாலும், அதற்கேற்ப கைவடிவில் உள்ள எண்டுஎஃபெக்டர் வளைந்து கொடுத்து குழந்தையை பாதுகாப்பாக பிடித்துக் கொள்ளப்படும். பின்னர் கண்ட்ரோல் சுவிட்ச்சை பயன்படுத்தி குழந்தைக்கு எவ்வித ஆபத்துமின்றி மேலே கொண்டு வர முடியும். ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தையை மீட்கும்போது மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்ஸிஜன் குழாய் உள்ளே அனுப்பப்படுகிறது.

இக்கருவியை வடிவமைக்க ரூ.10,000 செலவிடப்பட்டுள்ளது. இக்கருவிக்கு காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளோம். இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட கருவி தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இக்கருவிக்கு தேவையான மின்சாரத்தை வாகனங்களின் பேட்டரியில் இருந்து எடுத்துக்கொள்ளும்படி உருவாக்கி உள்ளோம். இக்கருவி ஒரு மீட்டர் நீளமும் எட்டு முதல் பன்னிரண்டு அங்குலம் வரை விரிவுபடுத்தியோ அல்லது சுருக்கியோ கண்ட்ரோல் சர்க்யூட் மூலம் இயக்கலாம்.

இதற்கு தேவையான உதவி மற்றும் அறிவுரைகளை பேராசிரியர் ராஜ பார்த்திபன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்து கொடுத்தனர் என்று கூறினர்.

English Summary :New tool to recover the child had fallen into the well bore. Adventure Mailam Engineering College