ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குனராக அறிமுகமான ‘தீனா, ஷங்கரின் ‘ஐ’ உள்பட ஏராளமான தமிழ், மலையாள படங்களில் நடித்த நடிகர் சுரேஷ்கோபி. இவர் தற்போது தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் (NFDC) தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்ய வர்தன் ஆகியோர் சுரேஷ் கோபியை இந்த பதவிக்கு தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்மூலம் கேரளாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் சேர்மேன் இவர்தான் என்ற பெருமையை சுரேஷ் கோபி பெற்றுள்ளார். முன்னதாக சுரேஷ் கோபியிடம் மத்திய அரசு இந்த பதவியை ஏற்றுக்கொள்ள விருப்பம் கேட்டதாகவும், அதற்கு சுரேஷ்கோபி சம்மதம் தெரிவிக்கவே தற்பொழுது அதிகாரபூர்வமாக நியமனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும், தேர்தலுக்கு பின்னரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமாக நட்புறவு வைத்திருந்த சுரேஷ் கோபி, சமீபத்தில் பாஜகவில் உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சமுக ஆர்வலராக சிறப்பாக செயல்பட்டு வருவதே இவர் சேர்மன் ஆனதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
வெளிநாட்டுப் படங்களை இந்தியாவில் வெளியிட அனுமதி தருவது மற்றும் வெளிநாடுகளுக்கு இந்தியப் படங்களை அனுப்புவது முதலானவை இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் முக்கியப் பணிகள். தற்பொழுது இயக்குநர் ரமேஷ் ஷிப்பி NDFC சேர்மேனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : Actor Suresh Gopi appointed as head of the National Film Development Corporation.