பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளின் கலந்தாய்வு முடிந்து அவர்களுக்கு தற்போது வகுப்புகள் தொடங்கிவிட்ட நிலையில் வரும் 17ஆம் தேதி முதல் பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது என்றும் இந்த கலந்தாய்வு சென்னை அண்ணாசாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி. (நர்ஸிங்), பி.பார்ம்., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பி.எஸ்சி. ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்டோமேட்ரி, பி.ஓ.டி. ஆகிய படிப்புகள் உள்ளன. இந்த பட்டப் படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டது. விண்ணப்பங்கள் பெற்று சென்றவர்களில் 20,940 விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 20,130 பேர் இந்த படிப்பிற்கு தகுதியானவர்கள் என இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் மருத்துவம் சார்ந்த 9 பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 17-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் மட்டும் கலந்தாய்வு நடைபெறாது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் கூறும்போது, “ தமிழகத்தில் உள்ள 5 அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி நர்ஸிங் படிப்புக்கு 250 இடங்களும், 2 அரசு கல்லூரிகளில் பி.பார்ம் படிப்புக்கு 120 இடங்களும் உள்ளன. அனுமதிக்கப்பட்ட தனியார் கல்லூரிகளின் விவரம் இன்னும் முழுமையாக வரவில்லை” என்று கூறியுள்ளார்.
English Summary:Nine Studies Counselling Date announced including Nursing,B.Parm.