ரயிலில் பயணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஏதாவது அவசர தேவை ஏற்படும்போது அபாய சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்தும் முறை இதுவரை கடைபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இனிமேல் அபாய சங்கிலிக்கு பதில் ரயில் ஓட்டுனர்களின் செல்போன் எண்களுக்கு பயணிகள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் முறை விரைவில் வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து ரயில் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுனரின் செல்போன் எண்கள் ஒவ்வொரு பெட்டியில் அச்சடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கும் ஓட்டுநர்கள் சிலர் கூறியதாவது: ரயில்களை இயக்குவது என்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய பணியாகும். ஒரு ரயில் ஓட்டுனர், ஒட்டுமொத்த ரயிலின் இயக்கத்தையும் சிக்னல்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சில இடங்களில் இவ்வளவு தூரம் வேகம் தான் செல்ல வேண்டுமென எச்சரிக்கை பலகை இருக்கும், இதையெல்லாம் பார்த்துதான் செல்ல வேண்டும். பணியின் போது, செல்போன் பயன்படுத்த கூடாது என்பது விதிமுறை. வாக்கி டாக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவும், சிக்னல்களை கடக்கும்போது வாக்கி டாக்கியை கூட பயன்படுத்தக்கூடாது. இந்நிலையில், நாங்கள் எப்படி செல்போன் மூலம் பயணிகளின் அவசரகால தகவல்களை பெற முடியும். செல்போன் மூலம் ஓட்டுநர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டுமென்ற முறையில் இருந்து ரயில்வேத்துறை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ரயில் பயணிகள் சில சமயம் சாதாரண விஷயங்களுக்காக கூட அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துவதால் ரயில்வே துறைக்கு ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே இந்த செல்போன் அழைப்பு மாற்று முறையை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
English Summary: No Chains, complaints through cellphones only? Railway Pilots depressed.