University-Exams-281115
சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சான்றிதழ்களை இழந்தவர்கள் எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் மறு சான்றிதழைப் பெற்று கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதன்படி, சான்றிதழ்களை இழந்தவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் சென்று தன்னிலை விளக்கம் அளித்தால் மட்டுமே போதுமானது என்றும் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்காமலேயே உடனடியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுளது..

வெள்ளத்தில் பட்டச் சான்றிதழ்களை இழந்தவர்கள் சான்றிதழ் தவறியதற்கான காவல்துறை புகார் பதிவுச் சான்று, அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் அல்லது கவுன்சிலரின் பரிந்துரைகளுடன் சம்பந்தப்பட்ட கல்லூரியின் ஒப்புதலுடன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. ஆனால் ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடும் மன உளைச்சலில் இருக்கும் மாணவர்களை, மறு சான்றிதழ் பெறுவதற்காக காவல் துறை சான்று, வட்டாட்சியர் பரிந்துரைகளைப் பெற அலைக்கழிப்பது அவர்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்குவதுபோல் ஆகிவிடும் எனப் பேராசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் எந்தவித ஆவணங்களும் இன்றி மறு சான்றிதழை வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா. தாண்டவன், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் திருமகன் ஆகியோர் கூறியதாவது: வெள்ள பாதிப்பில் பட்டச் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் பொதுத் தகவல் மையத்தை அணுகி, தன்னிலை விளக்கத்தை மட்டும் அளித்தால் போதுமானது. இந்தத் தன்னிலை விளக்கம் ஏற்கெனவே அச்சடித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர் பல்கலைக்கழக மையத்தில் அளிக்கப்படும் படிவத்தை நிரப்பி, தன்னிலை விளக்கத்தில் கையெழுத்திட்டால் போதுமானது. அவர்களுக்கு மறு சான்றிதழ் எந்தவிதக் கட்டணமும் இன்றி அளிக்கப்பட்டு விடும். இதற்காக, காவல் துறை புகார் பதிவுச் சான்றோ, வட்டாட்சியர் அல்லது கவுன்சிலர் பரிந்துரையோ, அவர்கள் படித்த கல்லூரியின் ஒப்புதலோ தேவையில்லை என்று கூறினர். இந்த அறிவிப்பினால் வெள்ளத்தினால் சான்றிதழ்களை தொலைத்தவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
English summary-No documents required for certificates-Chennai university