வடகிழக்கு பருவமழை 26-ம் தேதி தொடங்குவதற்கான சாதக சூழல் நிலவி வருவதால் வரும் 26-ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”தெலங்கானா பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது, இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வடகிழக்குப் பருவமழை வரும் 26-ம் தேதி தொடங்குவதற்கான சாதக சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது, வரும் 26-ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதே போல் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டையில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் பதிவாகும்” என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *