நாடு முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் காலியாக உள்ள கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு தேசிய அளவில் நடத்தப்படும் நெட் தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 28-ஆம் தேதி இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டும் இந்த தேர்வு குறித்த அறிவிப்பு வழக்கமாக மார்ச், செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும். இந்நிலையில் இவ்வருட அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

84 பாடங்களின் கீழ், நாடு முழுவதிலும் 89 முக்கிய நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும். இதுவரை யூஜிசி என்ற பல்கலைக்கழக மானியக்குழு நடத்தி வந்த இந்த தேர்வை கடந்த 2014 டிசம்பர் மாதம் முதல் சி.பி.எஸ்.இ என்ற மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தி வருகிறது.

இந்த தேர்வுக்கு www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். மே 15ஆம் தேதி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். இதுபோல, கட்டணத்தைச் செலுத்துவதற்கான வங்கி செலுத்து சீட்டை (சலான்) பதிவிறக்கம் செய்யவும், வங்கிகளில் கட்டணத்தைச் செலுத்தவும் மே 15ஆம் தேதியே கடைசி நாளாகும். இதுகுறித்த விவரங்களுக்கு விண்ணப்பாதரர்கள் சி.பி.எஸ்.இ. இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இதுவரை ரூ. 500-ஆக இருந்த தேர்வுக் கட்டணத்தை தற்போது சி.பி.எஸ்.இ 600-ஆக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் தேர்வுக் கட்டணமாக ரூ. 300 செலுத்தினால் போதுமானது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 150-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

English Summary : Notification of selection of the Net 2015