தீபாவளியை முன்னிட்டு நெரிசலைச் சமாளிக்க போக்குவரத்து போலீஸார் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை எம்.சி ரோடு மற்றும் கோயம்பேடு போன்ற இடங்களில் மக்களுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக் கூடாது.
வாகன நெருக்கம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பூக்கடையிலிருந்த பட்டாசு கடைகள் அனைத்தும் தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டுள்ளன. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள புரசைவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் காலியான ஆட்டோக்கள் செல்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் நெரிசல் குறைந்த இடத்துக்கு வந்துவிட்டு அங்கிருந்து ஆட்டோ பயணத்தை மேற்கொள்ளலாம். மக்கள் நெருக்கம் அதிகமான பகுதிகளில் சரக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
தி.நகர் பகுதியில் சோமசுந்தரம் பூங்கா தியாகராயா ரோடு, தணிகாசலம் ரோடு, மகாலட்சுமி தெருவில் உள்ளநாச்சியார் சாலை மற்றும் மோதிலால் தெருவில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தம் போன்ற நிறுத்தங்கள் போக்குவரத்து காவல் துறையால் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், புரசைவாக்கத்தில் நாராயணகுரு சாலை மாநகராட்சி திடல், அழகப்பா ரோட்டில் ஈவார்ட்ஸ் பள்ளி, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஈ.எல்.எம். பள்ளி திடல் போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.