தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை இனத்தவர்களான கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் பிரிவைச் சேர்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெறுவதற்காக புதிய இணையதளம் ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. www.scholarships.gov.in என்ற இந்த புதிய இணையதளத்தில் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே கல்வி உதவித்தொகை பெறும் நபர்கள் புதுப்பிப்பதற்கு நவம்பர் மாதம் 15-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.

மேலும், 2015-16ம் ஆண்டில் 2,279 நபர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்க அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள், கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதியுடைய மாணவர்கள், மேற்கூறிய இணையதள முகவரியில் விண்ணப்பத்ததைப் டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், மதிப்பெண் சான்றிதழ், மத சான்றிதழ், வருமானச் சான்று, கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிடச் சான்று, வங்கி கணக்கு எண் ஆகியவற்றின் நகல்களை இணைத்து, மாணவர்கள் பயிலும் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட கல்வி உதவித் தொகை மாணவ- மாணவியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மத்திய அரசினால் தேர்வு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு, முழுக்கல்வி கட்டணங்களும் வழங்கப்படும்.

English Summary : Now Minority students can apply their scholarships through online.