மகாவிர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய தொடர் விடுமுறைகளை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள ஆதார் மையங்கள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஒருசில ஆதார் மையங்கள் நேற்று செயல்படவில்லை என கூறப்படுகிறது.

நேற்று சென்னையில் உள்ள வளசரவாக்கம், அயனாவரம், பள்ளிக்கரணை, புழுதிவாக்கம், மாத்தூர், மணலி, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, நீலாங்கரை போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆதார் மையங்கள் வழக்கம் போல் செயல்பட்ட போதிலும், அடையாறு, சைதாப்பேட்டை, வள்ளுவர் கோட்டம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள ஆதார் மையங்கள் செயல்படவில்லை.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆதார் பதிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.குணா அவர்கள் கூறியபோது, “சென்னையில் செயல்பட்டு வரும் ஆதார் மையங்களில் பெரும்பான்மையானவை அரசு அலுவலகங்களில் அமைந்துள்ள காரணத்தினாலும், திடீரென ஞாயிற்றுக்கிழமை அன்று ஆதார் மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டதாலும், அரசு அலுவலகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், அங்கு செயல்படும் ஆதார் மையங்களைத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், பல்வேறு இடங்களில் ஆதார் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்பட முடியவில்லை. இருப்பினும், செயல்பட்ட ஆதார் மையங்களில் நேற்று குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்து பதிவு செய்ததாகவும், ஆதார் மையம் செயல்படும் என்ற அறிவிப்பு மக்களிடம் போதிய அளவில் சென்றடையாததே இதற்கு காரணமாகும் என்றும் கூறினார்.

பணிக்குச் செல்பவர்களுக்கு வசதியாக இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் மையங்கள் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

English Summary : Adyar, Saidapet, Valluvar Kottam, including Thandayarpet Aathar centers closed because it was located in Government building which cause problems unlocking on Sunday.