6JULCHPRS_Sand__07_2922947fசென்னை நகரில் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது இந்த பணிகளால் சிறுசிறு அசம்பாவிதமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை எழும்பூரில் பள்ளி ஒன்றின் கழிப்பறையில் இருந்து மணல் பொங்கி வெளியேறியது. மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளால்தான் இந்த மணல் வெளியேறி இருக்கலாம் என்று கருதப்பவதால் இது குறித்து மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள பெண்கள் கழிவறையில் திடீரென மணல் குவிந்து காணப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவிகள் கழிவறைக்கு சென்றபோது அங்கு 4 அடி உயரத்துக்கு மணல் நிரம்பி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மெட்ரோ ரயில் அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

கழிப்பறையில் உள்ள குழாய் வழியாக மணல் பொங்கி வெளியேறி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கழிப்பறையில் இருந்து விளையாட்டு மைதானம் வரை 4 அடி உயரத்துக்கு மணல் பொங்கி வெளியேறி இருந்ததால் மாணவ- மாணவிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

மணல் குவிந்து இருந்ததால் மாணவிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. அதனால் ஆசிரியைகளின் கழிவறையை மாணவிகள், பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பள்ளிக்கு அடியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணி நடைபெறுவதால், பணியின்போது மணல் வெளியேறி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கழிப்பறையில் குவிந்த மணலை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

English Summary :Oozing sand swamps Egmore school.