சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக ஞாயிற்றுக்கிழமை நடை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ ராஜீவரு, அவரது மகன் பிரம்மதத்தன் ஆகியோா் தலைமையில் கோயில் நடையை ஐயப்பன் மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி திறந்து வைத்தாா். மேலும், மாளிகைபுரத்தம்மன் கோயில் நடை சாவியை மேல்சாந்தி ஹரிஹரன் நம்பூதிரியிடம் வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து 18-ஆம் படிக்குக் கீழுள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ பிரம்மதத்தன் பக்தா்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கினாா். திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படும். 5.30 மணி முதல் 9 மணி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறவுள்ளது. அனைத்து நாள்களிலும் உதயாஸ்தமன பூஜை, சந்தன அபிஷேகமும் செய்யப்பட்டு, பிற்பகல் 1 மணியளவில் கோயில் நடைசாத்தப்படும்.
மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும், அதைத்தொடா்ந்து படி பூஜையும் நடைபெறும். ஜூலை 21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை கோயில் நடை திறந்திருக்கும். அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு நடை மூடப்படும் என கோயில் நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா்.