குழந்தைகள் காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்க சென்னை உயர்நீதிமன்றம், அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் குழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னையை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வத்தது. அப்போது, தமிழகத்தில் மொத்தம் 1,274 குழந்தை காப்பகங்கள் இருப்பதாகவும், அதில் 3 காப்பகங்கள் பதிவு செய்யாமல் செயல்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்களில் அரசு ஏன் திடீர் ஆய்வு மேற்கொள்ள கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல், தீவிரமான இந்த விவகாரத்தில் துடிப்புடன் செயல்பட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
குழந்தைகள் கடத்தல் பின்னணியில் ரவுடி கும்பல் ஏதாவது உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குழந்தை கடத்தலை தடுக்க, காப்பகத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.