திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திர விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு 108 பால் குட அபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மயில் காவடி மற்றும் அலகுகள் குத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவு 7 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவை முன்னிட்டு, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே.ஜெய்சங்கர், இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.