பிளாஸ்டிக் இழை வருடப்பட்ட காகித “கப்’களுக்கு தடை பட்டியலில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, தடை பட்டியலில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மாநில அரசு சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைப்படி தமிழக அரசு இப்போது இந்த முடிவினை அறிவித்துள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் தடையை பொது மக்களிடையே நடைமுறைப்படுத்தும் முன்பாக, அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிளாஸ்டிக் இழை வருடப்பட்ட காகித கப்களை தடைப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் முன்வைத்தனர். இதுபோன்ற காகித கப்களில் 95 சதவீதம் காகிதமும், 5 சதவீதம் மட்டுமே பிளாஸ்டிக் இழைகளும் பயன்படுத்தப்படுவதாக அதன் தயாரிப்பாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
குறிப்பாக, தமிழக அரசுத் துறை நிறுவனமான தமிழ்நாடு காகித ஆலை நிறுவனமானது, இதுபோன்ற பேப்பர் கப்களை ஆண்டுக்கு 2 ஆயிரம் டன் அளவுக்கு உற்பத்தி செய்கிறது. எனவே, பிளாஸ்டிக் தடை பட்டியலில் பேப்பர் கப்களை இணைக்கக் கூடாது என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டது.
தமிழக அரசின் குழு: இந்தச் சூழ்நிலையில், தடை பட்டியலில் இருந்து பேப்பர் கப்களை நீக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆராய தமிழக அரசின் சார்பில் தனியாக குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், மத்திய அரசு நிறுவனமான மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்பக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனம் ஆகியன இடம்பெற்றிருந்தன. இந்தக் குழு சிலமுறை கூடி பிளாஸ்டிக் இழை வருடப்பட்ட பேப்பர் கப்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து விவாதித்தது.
அரசுக்கு அறிக்கை அளிப்பு: இந்த நிபுணர் குழு தமிழக அரசுக்கு தனது பரிந்துரைகளை வழங்கியது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், பிளாஸ்டிக் தடை பட்டியலில் இருந்து காகித கப்களுக்கான தடையை விலக்கிக்கொள்ள தேவையில்லை என மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அரசுத் துறை அதிகாரிகள் கூறியது: காகித கப்களில் 5 சதவீதம் அளவுக்கு பிளாஸ்டிக் இழை வருடப்பட்டுள்ளது. இவ்வாறு காகித கப்களில் பிளாஸ்டிக்குகள் வருடப்பட்டிருப்பதால் அவை எளிதில் மட்கும் தன்மையை அடையாது என்பது நிபுணர் குழுவின் கருத்தாக உள்ளது. காகிதம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டாலும், 5 சதவீதம் பிளாஸ்டிக் இருப்பதால் அது எளிதில் மட்கும் தன்மையை அடையாது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பிளாஸ்டிக் இழை வருடப்பட்ட காகித கப்களுக்கு தடை பட்டியலில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தடை பட்டியலில் பிளாஸ்டிக் இழையிலான காகித கப்களும் இடம் பெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.