2024ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும் பெயர்கள் நீக்க மற்றும் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, இறுதி வாக்காளர் பட்டியல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளார். இதன்படி 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.
முன்பு 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஏற்பட்ட புயல், மழை காரணமாக ஏராளமானோர் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை இழந்துள்ளதால், அவற்றை திரும்ப வழங்கும் வகையில் இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.