வெளிநாடு செல்பவர்களுக்கு தேவையான பாஸ்போர்ட் எடுக்க சில சமயங்கள் வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் ஆவதை அடுத்து பாஸ்போர்ட் எடுப்பதை எளிமைப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் எளிமையாக்கப்பட்ட பாஸ்போர்ட் பெறுவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி சென்னை மண்டலத்தில் ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் புதிய முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்த நிலையில் தற்போது ஒருவாரத்திற்குள் பாஸ்போர்ட் வழங்கிவிட்டு அதன்பின்னர் போலீஸ் விசாரணை செய்யப்படும் என்றும், விசாரணையில் குற்றங்கள் அறியப்பட்டால் அளிக்கப்பட்ட பாஸ்போர்ட் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தால் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
உடனடியாக பாஸ்போர்ட் தேவைப்படுபவர்கள் தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதற்கான நோட்டரி அபிடவிட், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் எண் அட்டை ஆகிய 4 ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு உடனடியாக பாஸ்போர்ட் பெறலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை மண்டலத்தில் விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் புதிய முறை நேற்று அமலுக்கு வந்தது. இது தொடர்பாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே. பாலமுருகன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ஒரு விண்ணப்பதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு ஆகிய 3 ஆவணங்களின் நகலை இணைத்து விண்ணப்பித்தால் வழக்கமான கட்டணத்தில் (1500 ரூபாய்), 3 நாட்கள் அல்லது ஒரு வாரத்துக்குள் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும். இவற்றுடன் விண்ணப்பதாரர் நோட்டரி ஒருவரின் கையொப்பத்துடன் கூடிய பிரமான பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். பிப்ரவரி 1 முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் வழங்கிய பின்னர் போலீஸ் விசாரணை அறிக்கை பெறப்படும்.
போலீஸ் விசாரணை அறிக்கை கிடைக்க அதிக நாட்கள் ஆகின்றன. இதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியைக் கொண்டு மொபைல் அல்லது டேப்ளட் மின்னனு பொருட்கள் மூலம் போலீஸார் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் குறித்த தகவல்களை விசாரித்து, சரிபார்த்து அறிக்கையை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு ஒரே தினத்தில் அனுப்ப முடியும்.
தமிழக போலீஸார் இந்த செயலியைக் கொண்டு பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களை விசாரித்து, சரிபார்க்கும் நடைமுறைக்கு அனுமதி வழங்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் போலீஸ் விசாரணை அறிக்கை கிடைப்பது துரிதமாகும் ,என்று பாலமுருகன் தெரிவித்தார்.
English Summary: Passport in One Week. Yesterday onwards Effect in Chennai.