அஞ்சல்துறை அலுவலகங்களில் அஞ்சல் பணிகள் மட்டுமின்றி பல்வேறு சேவைகள் நடைபெற்று வருகிறது என்பதை நாம் அவ்வபோது பார்த்து வருகிறோம். இந்நிலையில் மேலும் ஒரு சேவையாக ஏர்செல் செல்போன் பில்களையும் அஞ்சல் நிலையங்களில் செலுத்தும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏர்செல் செல்லிடப்பேசி சந்தாதாரர்கள் தங்களுக்கான செல்லிடப்பேசி கட்டணத்தை இனிமேல் அஞ்சல் நிலையங்களில் செலுத்தலாம் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: “ஏர்செல்’ தொலைத்தொடர்பு நிறுவனம் – இந்திய அஞ்சல் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, “ஏர்செல்’ செல்லிடப்பேசி சந்தாதாரர்கள் தங்களின் செல்லிடப்பேசிக்கானக் கட்டணத்தை அஞ்சல் நிலையங்களில் செலுத்த முடியும்.
இந்த வசதியானது, சென்னை நகர மண்டலத்துக்கு உள்பட்ட அஞ்சலகங்களில் வருகிற 21-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன் பின்னர், “ஏர்செல்’ சந்தாதாரர்கள் தங்களின் செல்லிடப்பேசிக்கான (Postpaid) மாதக் கட்டண ரசீதை, அருகிலுள்ள அஞ்சலக கவுன்ட்டர்களில் கொடுத்து கட்டணத்தைச் செலுத்தலாம். அஞ்சலகங்கள் வாயிலாக செல்லிடப்பேசி கட்டணம் செலுத்தும் போது, எந்தவித கூடுதல் சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது. இந்த வசதியானது, விரைவில் புறநகர் பகுதிகளில் இயங்கும் அஞ்சலகங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary-Pay your Aircel mobile bills in post office from 21st December