நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் குணமாக முடியாதவர்கள், நீண்ட காலமாக கோமாவில் இருப்பவர்கள் ஆகியோர்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்குமாறு காமன் காஸ்’ என்ற அரசு சாரா அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
நேற்றைய விசாரணையின்போது அரசு சாரா அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனும், அரசு தரப்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் பி.எஸ்.பட்வாலியாவும் வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”கருணைக் கொலையை சட்டப் பூர்வமாக்குவது தொடர்பாக எந்த கட்டத்தில், நோயாளியின் உயிர் காக்கும் சாதனங்களை நீக்குவது; உயிருடன் இருக்கையில் இறப்பது குறித்து எழுதிய உயிலை நிறைவேற்றுதல் போன்றவை குறித்து, பாராளுமன்றத்தில் தான் விவாதித்து தக்க முடிவு எடுக்க வேண்டும்’ என்று கூறியதோடு பாராளுமன்றமோ அல்லது மக்கள் நீதிமன்றமோ தான் இந்த விஷயத்திற்கு இறுதி நீதிபதியாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு கருத்து கூறியுள்ளது.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை பாராளுமன்றத்தின் முடிவிற்காக காத்திருப்பதாக கூறியுள்ளது. ஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டு நர்சு அருணா வழக்கில், ”மிகவும் தவிர்க்க முடியாத, சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே ஒருவர் கருணைக் கொலை செய்யப்படலாம் என்றும் மற்றபடி கருணைக் கொலை சட்டப்படி தவறு என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: People court should take the final decision of euthanasia. The Supreme Court opinion.