சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மொத்தம் 14,263 பேருந்துகள் இயக்கப்பட்டன. கூட்ட நெரிசலை சமாளிக்க கோயம்பேடு, கேகே நகர், மாதவரம், தாம்பரம் சானடோரியத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கடந்த 11 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை சென்னையில் இருந்து சுமார் 7 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர். இதுதவிர, ஆம்னி பேருந்துகள் மூலமும், ரெயில்கள் மூலமும் ஏராளமானோர் வெளியூர் சென்று உள்ளனர்.
தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, நாளை பள்ளி – கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து, வெளியூர் சென்ற மக்கள், சென்னை திரும்ப துவங்கி விட்டனர். இந்தநிலையில், கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், இன்று முதல் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.