அமெரிக்காவின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமான பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பதவியில் இருந்து இந்தியாவைச் சேர்ந்தவரும், சென்னையில் பிறந்தவருமான இந்திரா நூயி 12 ஆண்டுகளுக்குப் பின் விலக உள்ளார்.
பெப்சி நிறுவனத்தில் இணைந்து 24 ஆண்டுகள் பணியாற்றிய இந்திரா நூயி உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக ஆய்வுகளில் தேர்வு செய்யப்பட்டார். 24 ஆண்டுப் பணியில் 12 ஆண்டுகள் இந்திரா நூயி தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து வரும் அக்டோபர் 3-ம் தேதி இந்திரா நூயி(வயது 62) விலக உள்ளார். இருந்தபோதிலும், 2019-ம் ஆண்டுவரை அந்த நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரா நூயிக்குப் பின், புதிய தலைவராக 22 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ராமோன் லகார்டா, இயக்குநர்கள் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெப்சி நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகள், கார்ப்பரேட் நிர்வாகம், பொதுக்கொள்கை, அரசு விவகாரங்கள் ஆகியவற்றை லகார்ட்டா கவனித்து வந்தார்.
பெப்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து இந்திரா நூயி வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, பெப்சி போன்ற மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தும் ஆகச்சிறந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து பங்குதாரர்கள், நிறுவனத்தின் வளர்ச்சிக்காகச் செயல்பட்டதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். எங்களுடைய குழு சர்வதேச அளவில் என் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
இன்று பெப்சி நிறுவனம் வலிமையான இடத்திலும், வளர்ச்சியையும் பெற்றுள்ளது பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்திரா நூயி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இன்று எனக்கு பலவேறுவிதமான உணர்ச்சிகள் கலந்த நாளாக இருக்கிறது. கடந்த 24 ஆண்டுகளாக எனது வாழ்வில் பெப்சி நிறுவனம் ஒரு பங்காக மாறிவிட்டது. பெப்சி நிறுவனத்துக்கு எனது பங்களிப்பை நினைத்து பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.