சென்னை: மானியம் மற்றும் மானியமல்லாத சிலிண்டர்களின் விலையை ரூ.2.94, ரூ. 60-ஆக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இனி சென்னையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 948.50 ஆகும்.
சர்வதேச விலையில் மாற்றம் ஏற்பட்டதாலும், அன்னிய செலவாணியில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாகவும், ஜிஎஸ்டி வரியின் தாக்கத்தினாலும் சிலிண்டர்களின் விலையை தற்போது எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால் இல்லத்தரசிகள் கடும் மனஉளைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.
மானிய சிலிண்டரின் விலை ரூ.2.94-ஆகவும் மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ. 60-ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவில் இருந்து அமலுக்கு வந்தது. சென்னையில் தற்போது மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ.888.50-க்கு விற்கப்படுகிறது. அது போல் மானியமுள்ள சிலிண்டர்களின் விலை 472.89-க்கு விற்கப்படுகிறது.
இனி புதிய விலையேற்றத்தின் படி சென்னையில் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.948.50 ஆகும். மானியமுள்ள சிலிண்டரின் விலை ரூ.475. 83 ஆகும். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு இது வரை ரூ.510 மானியமாக செலுத்தப்பட்டு வந்தது. இனி வங்கி கணக்குக்கு ரூ.570 செலுத்தப்படும்.
கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 6- முறை சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி மானிய சிலிண்டருக்கு ரூ.2.89-ம், மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.59-ம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.